இந்திய மாநிலங்கள் இந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.44 சதவீதமாகக் குறைந்தது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான “இக்ரா’வின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக மாநிலங்கள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் தொடர்ந்து 2 வாரங்களாக சரிவைக் கண்டு வந்தது.
இந்த நிலையில், மூன்றாவது வாரமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடன் பத்திர ஏலத்திலும் இந்த வட்டி விகிதம் 7.44 சதவீதமாகக் குறைந்தது.
கடந்த ஜனவரி முழுவதும் மாநிலங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விதம் கடந்த 2 ஆண்டுகள் காணாத அதிகபட்சமாக 7.8 சதவீதம் என்ற நிலையிலேயே இருந்தது.
ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவிலேயே கடன் திரட்டுவதற்கும், நிதிப் பற்றாக்குறையை நடப்பு நிதியாண்டில் 5.8 சதவீதமாக மற்றும் அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாகக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதற்குப் பிறகு மாநிலங்கள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை 7.44 சதவீதமாக இருந்த அந்த வட்டி விகிதம், முந்தைய வாரத்தைவிட 2 அடிப்படைப் புள்ளிகள் குறைவாகும். அப்போது வட்டி விகிதம் 7.46 சதவீதமாக இருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 12 மாநிலங்கள் அரசுப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.32,800 கோடியைத் திரட்டின. நடப்பு நிதியாண்டின் 4-ஆவது காலாண்டு ஏல நிகழ்ச்சி நிரலில் இந்த வாரத்துக்கான ஒட்டுமொத்த கடன் இலக்கு ரூ.45,200 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை திரட்டிய நிதி 27 சதவீதம் குறைவு.
கடந்த வார ஏலத்தில் மாநில கடன் பத்திரங்களின் சராசரி தவணைக் காலம் 13 ஆண்டுகளில் இருந்து 14 ஆண்டுகளாக அதிகரித்தது.
அத்துடன், மத்திய அரசுக் கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டு கால கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 41 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 37 அடிப்படைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை கடன் பத்திரங்களை வெளியிட்டு மாநிலங்கள் ரூ.8.14 லட்சம் கோடி திரட்டியுள்ளன. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 31.5 சதவீதம் அதிகமாகும். அப்போது மாநிலங்கள் திரட்டிய நிதி ரூ.6.19 லட்சம் கோடியாக இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.