பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விராட் கோலியின் ரசிகை, அன்பால் இந்தியர்களின் மனதை வென்றிருக்கிறார்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போது தான் அனல் அள்ளி தெளிக்கப்படுமே தவிர, இரு நாட்டு வீரர்களுக்கும் எதிர் அணிகளில் ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
சச்சின், கங்குலி, சேவாக், யுவராஜ், தோனி என்று இவர்களது ரசிகர்கள் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். சில தைரியமாக வெளியே சொல்வதுண்டு. சிலர் பயந்து கொண்டு, மனதுக்குள் என்ஜாய் செய்து கொள்வார்கள். அவ்வளவு தான்.
ரிஸ்லா ரெஹான்.. விராட் கோலியின் பக்தை. பாகிஸ்தான் அணியை வெறிப்பிடித்த ரசிகை. இரண்டுமே முரண்பாடாக இருக்கிறதல்லவா? அதான் ரெஹான்.
கராச்சியைச் சேர்ந்த இவர், 2018ல் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தை நேரில் பார்க்கச் சென்றிருந்தார். அதில், இவரை அடிக்கடி மொய்த்த கேமரா, இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்-களை அவ்வப்போது படம் பிடித்தது.
பாகிஸ்தான் வீரர்கள் பவுண்டரி அடித்தாலோ, விக்கெட் எடுத்தாலோ துள்ளிக் குதித்த ரெஹான், அதையே இந்தியர்கள் செய்த போது, சோகமாக முகத்தை வைத்து எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்க, வெரைட்டி வெரைட்டியாக க்ளிக்கி தள்ளினார் போட்டோகிராஃபர்.
மறுநாளே இன்டர்நெட் சென்சேஷன் ரெஹான் தான். “இந்தியா போட்டியை வென்றாலும், பாகிஸ்தான் இதயங்களை வென்றது” என்று மீடியாக்கள் எழுதித் தள்ள அம்மணிக்கு ஏக குஷி.
இந்த பிரபலத்தை அப்படியே 2019 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பயன்படுத்திக் கொண்டார் அவர். குறிப்பாக, இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டிக்கு நேரடியாக வந்து இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க, மீண்டும் வைரலானார்.
அப்போது பேட்டி ஒன்றில் அவரிடம் இந்திய அணியில் இருந்து ஒரு பரிசு பாகிஸ்தானுக்கு வேண்டும் என்றால் யாரை கேட்பீர்கள்? என்று கேட்டதற்கு, ‘எங்களுக்கு விராட் கோலி வேண்டும். தயவு செய்து கோலியை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறியது வைரலானது.