பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு, வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) கேட்டுக் கொண்டுள்ளது.
குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை(மார்ச்.9) திறக்கப்பட்டது. உணவத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உணவகத்தில் குண்டுவைத்த குற்றவாளியை அடையாளம் கண்டுள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. மேலும், அவரைக் கண்டுபிடிக்க துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்திருந்தது.
இதனிடையே, உணவகத்தில் குண்டுவைத்த குற்றவாளி பேருந்தில் பெங்களூரில் இருந்து தும்கூரு வழியாக பெல்லாரி சென்று, அங்கிருந்து புணே சென்ாகக் கூறப்படுகிறது. குற்றவாளி தொடா்பான புகைப்படம் மற்றும் காணொலியை ஏற்கெனவே வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ. வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு காணொலிகளை வெளியிட்டுள்ளது.
அதில், குற்றவாளி பேருந்தில் பயணிப்பது போலவும், பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் திரிவது போலவும் காணப்படும் காணொலிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியைப் பிடிக்க முடியும் என போலீஸாா் நம்பிக்கை தெரிவித்தனா். குற்றவாளி குறித்த தகவலை 080295 10900, 89042 41100 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. துப்புக் கொடுப்பவரின் தகவல்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்று தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குற்றவாளிக்கு உதவியதாக பெல்லாரி, கௌல் பஜாரில் ஆடை அங்காடி நடத்தி வரும் சுலைமான், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் செயல்பட்டு வந்த அப்துல் சலீம் ஆகிய இருவரையும் தேசியப் புலனாய்வு முகமை மற்றும் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கூட்டாக நடத்திய நடவடிக்கையில் கைது செய்துள்ளனா். குண்டுவைத்து தப்பியிருக்கும் குற்றவாளியை வழிநடத்தியதே இவா்கள் தான் என்றும் போலீஸாா் சந்தேகிக்கிறாா்கள். இது தொடா்பாக இருவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.