உதகை: ஹரியானா, பெங்களூரு ஆகிய இடங்களில் தலைமையிடம் இருப்பதாகவும், கிளை கோவையில் இருப்பதாகவும் கூறி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்கள் பெருகி வருகின்றன. இந்த சங்கங்களில் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 5 ஆண்டுகள் செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும் என்று கூறி, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் முகவர்கள் பணம் வசூலித்து வருகின்றனர்.
இப்படி வந்த முகவர் ஒருவரிடம், திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி வந்த ஒருவர் 5 வருடங்கள் முடிந்தும் பணம் கிடைக்கவில்லை. கோவையிலுள்ள அலுவலகத்துக்கு சென்று கேட்டும் பணம் வாங்க முடியாமல், ஹரியானாவில் உள்ள தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், அப்படி ஒரு அலுவலகமே அங்கு இல்லை என்று திரும்பி வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து, நுகர்வோர் குறைதீர் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சு.மனோகரன் கூறும்போது, “இதுபோன்ற சங்கங்கள் மூலமாக, பலருடைய கோடிக்கணக்கான பணம் பறிபோய் உள்ளது. ஒருவர் மட்டுமே வழக்கு தொடுத்துள்ளார். தற்போது, பெங்களூருவில் தலைமை அலுவலகம் இருப்பதாகக் கூறி, நீலகிரி மாவட்டத்தில் முகவர்கள் வலம் வருகின்றனர். நீலகிரி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உழைத்து சம்பாதித்த பணத்தை சேமிக்க, அஞ்சலகம், வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் உள்ளன. எனவே, அதிகமாக வட்டி கிடைக்கும் என்று ஏமாற்றும், இதுபோன்ற போலி நிறுவனங்களில் செலுத்தி பணத்தை இழக்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வர வேண்டும்” என்றார்.