Last Updated:
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில், தாய் மற்றும் நான்கு சகோதரிகளை இளைஞர் ஒருவர் கொன்றுள்ளார்.
உலகம் முழுக்க இன்று, புத்தாண்டை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடி வரும் நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை கொடூரமாக கொன்றுள்ளார். மேலும், உயிர் அற்ற உடல்களுக்கு முன் நின்று எப்படி கொன்றேன் என்றும் அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்தவர் பதர். இவருக்கு அச்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து அலியா (9), அலிஷியா (19), அக்ஸா (16), ரஹிமன் (18) என நான்கு பெண் குழந்தைகளும், அர்ஷத் (24) என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் நேற்று (31ம் தேதி) இரவு புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆக்ராவில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிற்கு வந்துள்ளனர். பின் லக்னோவில் உள்ள நாகா பகுதியில் இருக்கும் சரஞ்சித் எனும் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இன்று காலை ஓட்டல் அறையில் இருந்து அர்ஷத் மற்றும் அவரது தந்தை பதர் ஆகிய இருவரும் வெளியேறினர். இதில், பதரை ரயில் நிலையத்தில் விட்ட அர்ஷத் நேராக காவல் நிலையத்திற்கு சென்று, தான் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார்.
அர்ஷத்தை கைது செய்த போலீசார், உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பம் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டபோது அர்ஷத்தின் தாய் மற்றும் நான்கு சகோதரிகள் பிணமாக கிடந்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திலும், பிணங்களிலும் உள்ள தடயங்களை சேகரித்தனர். பின் அவர்களது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அர்ஷத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அர்ஷத், “31ம் தேதி இரவு என் தாய் வாயில் துணியை வைத்து அடைத்து அவரின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்தேன். பிறகு என் சகோதரிகளின் வாயிலும் துப்பட்டாவை வைத்து அவர்களின் கை மணிக்கட்டுகளில் அறுத்தேன். இதனால், ஐந்து பேரும் மரணித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய மத்திய மண்டல டி.சி.பி. ரவீனா தியாகி, அர்ஷத் குடும்பம் அவர்கள் வசித்த பகுதியில் இருக்கும் அக்கம்பக்கத்தினரால் அவரது குடும்பம் துன்புறுத்தப்படுவதாகவும், அதனால் தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் அஞ்சுவதாகவும், அதனால் தனது குடும்பத்தினரை கொல்ல முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அர்ஷத்திடமும், இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், தனது தந்தையை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு வந்ததாக அர்ஷத் கூறியுள்ளார். தற்போது அவரது தந்தை பதர் தலைமறைவாகியுள்ளார். எனவே பதரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
January 01, 2025 3:18 PM IST
புத்தாண்டை கொண்டாட சென்ற குடும்பம்.. தாய் மற்றும் நான்கு சகோதரிகளை கொன்ற இளைஞர்! லக்னோவில் அதிர்ச்சி