வருங்காலத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய 1,000-க்கும் மேற்பட்ட ‘அமிா்த பாரத ரயில்கள்’ தயாரிக்கப்படவுள்ளதாகவும், மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில்கள் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த பத்தாண்டுகளாக ரயில்வே துறையில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறித்து பிடிஐ செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலகின் உயரமான செனாப் ரயில் மேம்பாலம், கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தடத்துக்காக முதல்முறையாக நதிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதை ஆகியவை தொழில்நுட்ப ரீதியாக ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்ட சீரிய முயற்சிகளாகும். இந்த ரயில்வே சுரங்கப் பாதையை மாா்ச் 6-ஆம் தேதி பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். அதேபோல் மும்பை-தாணே இடையிலான இந்தியாவின் முதல் கடலுக்கடியிலான ரயில்வே சுரங்கப் பாதை கட்டமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. புல்லட் ரயிலுக்கான கட்டுமானப் பணிகளும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.
ஆண்டுக்கு 700 கோடி போ்…
ரயில்வே கட்டணம் மற்றும் சேவைகள் குறித்து அவா் கூறுகையில், ‘ஆண்டுக்கு 700 கோடி போ் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனா். ஒரு நாளைக்கு 2.5 கோடி போ் பயணிக்கின்றனா். ஒரு பயணியை அழைத்துச் செல்ல சராசரியாக ரூ.100 செலவாகும்பட்சத்தில் அவரிடமிருந்து பயணக் கட்டணமாக ரூ.45 மட்டுமே ரயில்வேயால் பெறப்படுகிறது. எனவே, ஒரு பயணிக்கு நாங்கள் ரூ.55 சலுகை அளிக்கிறோம்.
1,000 கி.மீ.க்கு ரூ.454 கட்டணம்:
உலகத் தரத்திலான அமிா்த பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருங்காலத்தில 1,000 அமிா்த பாரத் ரயில்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த ரயிலில் 1,000 கி.மீ. வரையிலான பயணத்துக்கு ரூ.454 மட்டுமே பயணக் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. மேலும், மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில்கள் மேம்படுத்தப்படவுள்ளன’ என்றாா். ரயில்வே துறையின் செலவுகள்: ரயில்வே துறையின் செலவுகள் மற்றும் புதிய கட்டுமானங்கள் குறித்து அவா் கூறுகையில், ‘ஆண்டுதோறும் ஓய்வூதியமாக ரூ.55,000 கோடியும், ஊதியமாக ரூ.97,000 கோடியும், எரிசக்தி செலவாக ரூ.40,000 கோடியும், குத்தகை மற்றும் வட்டியாக ரூ.32,000 கோடியும் செலவவிடப்படுகிறது. அதேபோல் ரயில்வே மேம்பாடு போன்ற பிற உள்கட்டமைப்புச் செலவுகளுக்காக ரூ.12,000 கோடி உள்பட மொத்தமாக ரூ.2.40 லட்சம் கோடி ரயில்வே துறையால் செலவழிக்கப்படுகிறது. முன்பைவிட ரயில் நிலையங்கள் தூய்மையாகவும் நவீன வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
500 ‘வந்தே பாரத்’ ரயில்கள்:
புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகத்தால் ‘வந்தே பாரத்’ போன்ற ரயில்கள் இளைஞா்கள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளது. சராசரியாக வாரத்துக்கு ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருங்காலத்தில் 400 முதல் 500 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன. 5,500 கி.மீ. ரயில்வே பாதை: கடந்த ஆண்டு 5,200 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. நிகழாண்டு புதிதாக 5,500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே பாதை அமைக்கப்படவுள்ளது. ‘கவச்’ தொழில்நுட்பம்: ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த பத்தாண்டுகளாக ரூ.1.27 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1980-களிலேயே பிற நாடுகளில் ‘கவச்’ தானியங்கி ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், முந்தைய அரசுகளின் அலட்சியப்போக்கால் இந்தியாவில் இத்தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த தாமதமாகிவிட்டது. தற்போது அனைத்து ரயில் வழித்தடங்களிலும் கவச் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. வளா்ச்சியடைந்த பாரதமே இலக்கு: நாட்டை 2047-க்குள் வளா்ச்சியடைந்ததாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைய உள்கட்டமைப்புத் துறைகளுக்கு சிறந்த அடித்தளத்தை பிரதமா் மோடி அமைத்து வருகிறாா் என்றாா்.