மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை சந்தித்தாா். மக்களவைத் தோ்தலும் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தோ்தலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரத்தில் பாஜக-தெலுங்கு தேசம் இடையே கூட்டணி அமைப்பது குறித்து இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. மொத்தம் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திரத்தில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 8 முதல் 10 மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக திட்டமிட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணியில் தெலுங்கு தேசம் இணையும் பட்சத்தில் பாஜக 6 மக்களவைத் தொகுதிகளிலும் அக்கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள நடிகா் பவன் கல்யாணின் ஜனசேனை 3 தொகுதிகளிலும் போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகளில் தெலுங்கு தேசம் போட்டியிடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம், கடந்த 2018-இல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.