நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புக்கு இடையே, பாஜகவில் இருந்து விலகுவதாக கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 2019ஆம் ஆண்டு மார்ச்சில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் சேர்ந்தார். அதன் பின் டெல்லியில் பாஜகவின் முகமாக மாறி, 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு 6 லட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காம்பீர் தனது அறக்கட்டளை மூலம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் 2020 சட்டமன்றத் தேர்தலிலும், 2022 உள்ளாட்சி தேர்தலிலும் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவும் தன்னை அரசியல் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள காம்பீர், கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்த, தனது அரசியல் கடமைகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் மக்களுக்கு சேவை செய்ய தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காம்பீருக்கு பாஜகவில் வாய்ப்பு கிடைக்காது என்ற செய்திகளுக்கு மத்தியில், ஐபிஎல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு பாஜகவில் வாய்ப்பு அளிக்கப்படாததால் காம்பீர் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவரது விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக கவுதம் காம்பீர் தொடர்ந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதுவே அவர் பாஜகவிலிருந்து விலகும் முடிவுக்கு முக்கிய காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே கவுதம் காம்பீரின் எக்ஸ் தள பதிவு இதுவரை 30 லட்சம் பார்வையை கடந்து தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…