பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. மொத்தமுள்ள 266 இடங்களில் 250 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 99 இடங்களை கைப்பற்றியுள்ளனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 71 இடங்களையும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்றவர்கள் 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், நவாஸ் ஷெரீப் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து லாகூரில் உள்ள நவாஸ் ஷெரிப்பின் இல்லம் முன்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனிப் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவைப்படும் நிலையில், தொண்டர்கள் மத்தியில் பேசிய நவாஸ் ஷெரீப், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாகக் கூறினார். இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் ஜமியத் உலேமா இ இஸ்லாம் கட்சி தலைவர் மவுலானா ஃபஸ்லர் ரகுமான் ஆகியோரை சந்தித்து பாகிஸ்தானின் தற்போதைய சூழலை எடுத்துக் கூறி கூட்டணி அரசை ஏற்படுத்த வேண்டும் என்று தனது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்பிற்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அலி சர்தாரி, அவரது மகனும், கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ ஆகியோர் லாகூர் விரைந்துள்ளனர். இருவரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டணி அரசாங்கம் அமைப்பது குறித்து விவாதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…