பட மூலாதாரம், Getty Images
பிரதமர் ஜான் கீ
நியுசிலாந்தில் ஆளும் தேசியக் கட்சி மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கின்றது.
கிட்டத்தட்ட 99 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், 48 வீதமான வாக்குகளை பிரதமர் ஜான் கீ- இன் தேசியக் கட்சி வென்றுள்ளது.
இதன்மூலம் ஆளுங்கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியும்.
எதிரணியான தொழிற்கட்சி 25 வீதமான வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பசுமைக் கட்சி 10 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாட்டின் வரலாற்றில் இம்முறை தேர்தல் பிரசாரமே ‘மிகக் கேவலமானது’ என்று வர்ணிக்கப்பட்டிருந்தது.
ஆளுங்கட்சியினர் தங்களின் எதிராளிகளை இழிவு படுத்துவதற்காக அரசியல்-இணைய எழுத்தாளர்களை பயன்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சனைகளை இருட்டடிப்புச் செய்ததாக விமர்சனங்கள் உள்ளன.
எதிரணியினரை அரசு மறைமுகமாக கண்காணித்ததாகவும் சர்ச்சைகள் நிலவின.
நியுசிலாந்தின் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் பெரும்பாலும் கூட்டணி அரசாங்கமே அமையக்கூடிய சாத்தியமே நிலவியமை குறிப்பிடத்தக்கது.