புதுடெல்லி: நாட்டில் வறுமை நிலை கணிசமாக குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி கிராமப்புறங்களில் மக்களின் நுகர்வு வலுவாக உள்ளது. இதையடுத்து, நகர்ப்புறங்களுடனான அதன் இடைவெளி குறைந்துள்ளது. மேலும், நாட்டில் வறுமை நிலை கணிசமாக 5 சதவீதமாக குறைந்துள்ளது. வறுமை நிலை நுகர்வு செலவின தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்திய கிராமங்களில் உணவுக்கான செலவினம் 2011-12-ல் 53 சதவீதமாக இருந்த நிலையில், அது 2022-23-ல் 46.4 சதவீதமாக குறைந்துள்ளது.
சமீப காலங்களாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற நுகர்வுகளில் உணவு மற்றும் தானியங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது. அதேசமயம், உணவு அல்லாத பொருட்களான குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளன.
தற்போதைய விலையில், கிராமப்புற மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு 2011-12-ல் ரூ.1,430-லிருந்து 2022-23-ல் ரூ.3,773-ஆக 164% உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் 2011-12-ல் 2,630-லிருந்து 2022-23-ல் ரூ.6,459-ஆக 146% அதிகரித்துள்ளது. இவ்வாறு சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கவர்னர் சி ரங்கராஜன் தலைமையிலான குழு, வறுமைக் கோட்டில் உள்ள மாதாந்திர தனிநபர் செலவினத்தை நகர்ப்புறங்களில் ரூ.1,407 ஆகவும், கிராமப்புறங்களில் ரூ.972 ஆகவும் நிர்ணயித்திருந்தது. அதன்படி, நகரங்களில் ஒரு நாளைக்கு ரூ. 47 மற்றும் கிராமங்களில் ரூ. 32 செலவழிக்கும் நபர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்தப் பிரிவில் 5 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.