ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனிக்கு பிறகு சென்னையின் கேப்டனாக யார் பொறுப்பு ஏற்பார் என்பது குறித்து அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்த முறை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் போட்டி அட்டவணை முதற்கட்டமாக மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மொத்தம் 21 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 74 போட்டிகளைக் கொண்டதாக நடத்தப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.
முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வரும் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தோனிக்கு பின்னர் சென்னை அணியின் கேப்டன் யாராக இருக்கும் என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு சீசனின்போது ரவிந்திரா ஜடேஜாவுக்கு அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பு கொடுத்தது. இருப்பினும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. இதன்பின்னர் தோனியே மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தோனி தலைமையில் வென்றது. இந்நிலையில் தோனிக்கு பின்னர் யார் கேப்டன் என்பது குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது-
சென்னை அணியில் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்புகள் குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறி விட்டார். கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்புகளுக்கு யார் சரியானவர்கள் என்பதை அணியின் பயிற்சியாளரும், கேப்டனும்தான் முடிவு செய்வார்கள்.
அவர்கள் முடிவு எடுத்ததும் அதனை நான் தெரிவிக்கிறேன். அதுவரையில் இந்த விஷயம் குறித்து யாரும் பேச மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…