மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்க முடியும் எனவும் எதிர்வரும் 30 நாள்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு, தற்காலிக குடில்களில் வசித்த 24 குடும்பங்களுக்கு, குடிதண்ணீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான தபால் பெட்டியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் உரையாற்றுகையில்,
மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின் போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் குடும்பங்களுக்கு சௌமியபூமி காணி உரிமை வழங்கும் திட்டம் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினத்தன்று ஆரம்பமாகும் என்றார். (a)