இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சில்ஹட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடர் 1–1 என சமநிலை பெற்றிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதில், இரண்டு போட்டித் தடைக்குப் பின்னர் இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க களமிறங்கவுள்ளமை அணிக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.
இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டு துறைகளிலும் சோபிக்கத் தவறிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் அணியில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக முதல் இரு போட்டிகளிலும் சோபிக்கத் தவறிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டு நிரோஷன் திக்வெல்ல அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் ஒருவரும் விக்கெட் வீழ்த்த தவறினர். எனவே அவர்களில் ஒருவருக்கு பதிலே வனிந்து ஹசரங்க இன்றைய தினத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேல் இன்றைய ஆட்டம் பகல் போட்டியாக இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கே ஆரம்பமாகவுள்ளது. எனவே முதல் இரு போட்டிகளிலும் பனி காரணமாக இரண்டாவது பந்துவீசும் அணிக்கு இருந்த சிரமம் இந்தப் போட்டியில் இருக்காது.