தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளரான 22 வயது மதிக்கத்தக்க முனீப் அமின் பட்டின் கண்டுபிடிப்புக்கு நாசா நிறுவனம் அங்கீகாரம் அளித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. அவரது பெயரும் கண்டுபிடிப்பும் நாசாவின் நினைவுகூரப்படும் பிற துறைகளுக்கான புகழ் மண்டபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொழில்நுட்பவியலாளர் முனீப் அமின் பட் குறிப்பிடுகையில், ‘எனது சிறுபராயம் முதல் விண்வெளியை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகிறேன். இப்பின்னணியில் அமெரி்க்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் நான் அண்மையில் பணிபுரிந்தேன். அதன் போது அவர்களது கணினி தரவு முறைமைகளில் ஒரிரு பாதிப்புகள் காணப்படுவதை அடையாளம் கண்டேன். அது தொடர்பில் நாசாவுக்கு அறிக்கையிட்டேன். அவ்வறிக்கையை நாசாவின் பாதுகாப்பு குழு சரி பார்த்ததோடு பாதிப்புகள் உண்மையானவை என்பதையும் உறுதிப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து நாசாவின் தரவுகளைப் பாதுகாப்பதில் எனது பங்களிப்பும் ஒரு பங்கைக் கொண்டிருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அத்தோடு நாசாவின் நினைவுகூரப்படும் பிற துறைகளுக்கான புகழ் மண்டபத்தில் எனது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை இட்டும் நான் ஊக்கமடைகிறேன்’ என்றுள்ளார்.
அதேநேரம் நாசா நிறுவனத்துடன் மாத்திரமல்லாமல் அப்பிள், இன்டீட், ஒரக்கிள் போன்ற பெரிய நிறுவனங்களுடனும் பணியாற்றியுள்ள நான், அந்நிறுவனங்களின் முறைமைகளில் காணப்பட்ட கணினி தரவு மீறல் பாதிப்புக்களை கண்டறிந்து அந்நிறுவனங்களின் கவனத்தற்கு கொண்டு வந்து அந்நிறுவனங்களைப் பாதுகாத்துள்ளேன். இதன் நிமித்தம் பாராட்டுக்களும் பணப்பரிசில்களும் எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.