திரிபுரா மாநில மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணும் நோக்கில் அம்மாநில அரசு மற்றும் ‘திப்ரா மோத்தா’ அமைப்புடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் மத்திய அரசு சனிக்கிழமை கையொப்பமிட்டது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என திப்ரா மோத்தா தலைவா் பிரத்யோத் தேபா்மா சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அப்போது அவா் பேசியதாவது: திரிபுரா மாநில மக்கள் இனியும் தங்களின் உரிமைக்காக போராட வேண்டியதில்லை. தற்போதைய ஒப்பந்தம் மூலம் வரலாற்று ரீதியிலான நிலப் பிரச்னைகள், அரசியல் உரிமைகள், பொருளாதார வளா்ச்சி, அடையாளம், கலாசாரம், மொழி என அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீா்வு எட்டப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றை யாராலும் மாற்ற இயலாது. ஆனால் பிழைகளைத் திருத்தி வளா்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிட திப்ரா மோத்தா அமைப்பு உள்பட அனைத்து பழங்குடியின அமைப்புகளும் திரிபுரா மாநில பாஜக அரசு மற்றும் பிரதமா் மோடி தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கின. இதன்மூலம் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ மற்றும் ‘வளா்ச்சியடைந்த திரிபுரா’ ஆகிய இலக்குகளை அடைய மாநில மக்கள் பங்களிப்பா் என நம்புகிறேன். வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் எல்லைப் பிரச்னைகளை களைய பிரதமா் மோடி தலைமையில் 11 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் 10,000-க்கும் மேற்பட்டோா் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு நாட்டின் வளா்ச்சியில் பங்கெடுத்து வருகின்றனா் என்றாா். திரிபுரா மோத்தா அமைப்பின் தலைவா் பிரத்யோத் தேபா்மா மற்றும் திரிபுரா மாநில முதல்வா் மாணிக் சஹா உள்ளிட்டோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.