சீனாவின் ஹாங்காங் விமான நிலையத்தில் ஜோர்டானிய நாட்டைச் சேர்ந்த 34 வயது நபர், வேலை செய்துவந்தார். அவர் பராமரிப்பு நிறுவனமான சீனா ஏர்கிராஃப்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர். இந்த நிலையில், பழுதான விமானத்தை இழுத்துச் செல்லும் இழுவை டிராக்கில் ஜோர்டான் பணியாளரும் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்திருக்கிறார். இதை இழுவை வாகனத்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் கவனிக்கவில்லை. இந்த நிலையில், கீழே விழுந்த பணியாளர்மீது பழுதான விமானம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக ஹாங்காங்கின் விமான நிலைய ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“பராமரிப்பு நிறுவனமான சீனா ஏர்கிராஃப்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர், இழுவை வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்திருக்கலாம். அதனால், அவருக்கு மரணம் ஏற்படும் வகையான விபத்து ஏற்பட்டிருக்கிறது. கவனமின்மையுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற 80 வயது ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த விபத்தால் எந்த விமானச் சேவையும் பாதிக்கவில்லை. வழக்கம்போல விமான நிலையம் இயங்கிக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.