சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின்நிலையம் அமைப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன.
இந்நிலையில், வெளிநாடுகள்போல கடல் பகுதிகளிலும் காற்றாலை மின்நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியில் 35 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையம் அமைப்பதற்கான சாதகமான சூழல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இடையே உள்ள கடலோர பகுதி, காற்றாலை மின்நிலையம் அமைக்க அதிக வாய்ப்பு உள்ள பகுதியாக ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, 4 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையம் அமைக்க இந்திய சூரிய எரிசக்தி கழகம் டெண்டர் கோரியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அமைக்கும் காற்றாலை மின் நிலையங்களில் உற்பத்தியாவதில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு தருமாறு கோரியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.