சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம் வழங்கலுக்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 6 மாவட்டங்களில் இதுவரை 2,000 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.51.26 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2023 டிச.30 அன்று அறிவித்தபடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான மூலதனச் செலவு மற்றும் நடைமுறை மூலதனம் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு நிதியுதவி அளித்திட, “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்” என்ற சிறப்புத் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் (TIIC) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், 6 மாவட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பயனாளிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, 6 மாவட்டங்களில் இதுவரை 2,000 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.51.26 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் 31.01.2024 அன்று வரை திட்டமிடப்பட்ட கடன் வழங்கலுக்கான கால அளவு இலக்கு தொகையான ரூ.100 கோடி கடன் தொகை வழங்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.