சென்னை: தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்கவும் டிட்கோ நிறுவனம், இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை பெருவழித்தடத்தை (TNDIC) செயல்படுத்துவதற்கான ஒரு முகமை நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO – டிட்கோ) செயல்பட்டு வருகிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில் பூங்காக்களை அமைத்து, அதன்மூலம் தொழில் முனைவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதுடன் இத்துறைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதே தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை பெருவழித்தடத்தின் நோக்கமாகும்.
2,000 ஏக்கர் பரப்பளவில்.. தமிழகத்தில் பெருகிவரும் விண்வெளித்துறை சார்ந்த நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு, சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில்துறை மற்றும்உந்துசக்தி பூங்காவை அமைப்பதற்கு டிட்கோ திட்டமிட்டுள்ளது.
மேலும், இப்பூங்காவில் அமையவுள்ள நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு திறன்மிகு மையத்தை உருவாக்கவும் டிட்கோ திட்டமிட்டுள்ளது.
இன்-ஸ்பேஸ் (IN-SPACe) என்பது இந்தியாவில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின், அனைத்து விண்வெளித் துறை நடவடிக்கைகளுக்கான ஒற்றைச் சாளர முகமை நிறுவனமாகும்.
இந்நிறுவனம் ஏவுதல் வாகனம், செயற்கைக்கோள்களை உரு வாக்குதல், விண்வெளித்துறை சார்ந்த சேவைகளை வழங்குதல், விண்வெளி உள்கட்டமைப்பு வசதிகளை பகிர்தல் மற்றும் புதியவசதிகளை நிறுவுதல் போன்ற பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், மேற்பார்வையிடுதல் ஆகியவற்றை செயல்படுத்தும்.
விண்வெளித் துறைக்காக ஆதரவாக முன்மொழியப்பட்ட திறன்மிகு மையத்தை அமைப்பதற்கு இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் பெரிதும் பயன்படும்.
டிட்கோ நிறுவனம், இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மார்ச் 6-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனத் தலைவர் பவன் குமார் கோயங்கா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, இன்-ஸ்பேஸ் இணைச் செயலாளர் லோச்சன் செஹ்ரா ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்குவதற்குமான வழிமுறைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, விண்வெளித்துறை முன்னேற்றத்துக்காக டிட்கோநிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள திறன்மிகு மையத்துக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த பூங்காவில் அவற்றின் உற்பத்தி வசதிகளை அமைப்பதில் இன்-ஸ்பேஸ்நிறுவனம் முக்கிய பங்காற்றும். மேலும், விண்வெளி மற்றும் அதைச் சார்ந்த துறை தொழில்களை தமிழகத்தில் நிறுவ ஊக்குவிப்பதிலும் இன்-ஸ்பேஸ் நிறுவனம் பங்களிக்கும்.
டிட்கோ நிறுவனம், விண்வெளி உற்பத்திக்கான நிறுவனங்களைத் தொடங்குவதற்கு தேவையான தொழிற்பூங்காவை அமைக்கும். விண்வெளித் தொழில்துறை நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், விண்வெளித்துறையில் புத்தொழில் விண்கலம், ராக்கெட் மற்றும் உதிரிபாகங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு, தயாரிப்பு போன்றவற்றுக்கு பெரிதும் உதவும். உலக விண்வெளி தொழில்துறையில் தமிழகம் ஒரு மிகச்சிறந்த முனையமாக உருவெடுக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் பங்கு வகிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.