அமெரிக்கப் படைகள், கூட்டாளி அரபு நாடுகளின் பங்கேற்புடன் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ எஸ்) ஆயுததாரிகளுக்கு எதிராக 14 இடங்களில் விமான குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமைக் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.
பல்வேறு இலக்குகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன
சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இஸ்லாமிய அரசு இயக்கத்தின் பயிற்சி வளாகங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், வாகனங்கள், சேமிப்புக்கூடங்கள் போன்றவை இத்தாக்குதலில் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன என்று அது தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய அரசு இயக்கத்தினரின் தலைமையகம் அமைந்துள்ள சிரியாவின் வடகிழக்கிலுள்ள ரக்காவின் இலக்குகளும் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன.
இத்தாக்குதல்களில் குறைந்தது 20 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனிலிருந்து செயல்படுகின்ற சிரியா நிலவர கண்காணிப்புக் குழு கூறுகிறது.
மேற்குலக நலன்களுக்கு எதிராக விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுக்கொண்டிருந்த அல்கைதா மூத்த உறுப்பினர்களின் வலையமைப்பு மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் கட்டுப்பாட்டுத் தலலமையகம் தெரிவித்துள்ளது.