சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில் தொடரின் கடைசி போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது.
இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அதனால் இந்திய அணியை பும்ரா வழிநடத்துகிறார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கால் பகுதியில் ஸ்டார்க் வீசிய பந்தை லெக் திசையில் ஆட முயன்று அவர் ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால் 10, ஷுப்மன் கில் 20, கோலி 17, ரிஷப் பந்த் 40, நிதிஷ் குமார் 0, ஜடேஜா, 26, வாஷிங்டன் சுந்தர் 10, பிரசித் கிருஷ்ணா 3, பும்ரா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 72.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் போலண்ட் 4, ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 2 மற்றும் லயன் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்ற நெருக்கடியில் இந்தியா விளையாடுகிறது. இதில் வெல்வதன் மூலம் தொடரை இந்தியா சமன் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைக்கலாம்.