சென்னை: கோடக் லைஃப் அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் (சிஎஸ்ஆர்), ஸ்மைல் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு பங்களிப்பு வழங்கும் நோக்கில் 7 நடமாடும் மருத்துவ வேன்களை வழங்குகிறது.
சென்னையில் 3 நடமாடும் மருத்துவ வேன்களையும், தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் தலா 2 நடமாடும் மருத்துவ வேன்களையும் வழங்குகிறது. இந்த நடமாடும் மருத்துவ வேன்கள் சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சென்று, சுகாதாரப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். வாகனத்தை இயக்கும் செலவுகள், மருத்துவப் பொருட்களுக்கான செலவுகள் உள்ளிட்டவற்றை கோடக் லைஃப் நிறுவனமே ஏற்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஷ் பாலசுப்ரமணியன் கூறுகையில், “தரமான மருத்துவ சேவையை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள். சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு சுகாதார வசதிகளை எடுத்துச்செல்வதை எங்களது திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.
நடப்பு நிதியாண்டிற்கான தங்கள் சிஎஸ்ஆர் நிதியில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.