கோலாலம்பூர்:
நேற்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS) தெற்கு நோக்கிய திசையில் ஸ்கூடாய் டோல் பிளாசா அருகே போக்குவரத்து துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சாலைப்பாதுகாப்பு நடவடிக்கையில் மொத்தம் 419 சம்மன்கள் வழங்கப்பட்டன.
இந்த நடவடிக்கையில் தெற்கு மண்டலம் 3 நெடுஞ்சாலை அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் 20 உறுப்பினர்கள் ஈடுபட்டதாக, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) இயக்குநர் டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி கூறினார்.
அவர்களுடன் ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறையின் 55 அதிகாரிகள், ஜோகூர் மாநில குடிவரவுத் துறையினர் 13 பேர் மற்றும் துணை போலீசார் 12 ஆகியோரும் உடன் இருந்தனர்.
“இந்த நடவடிக்கையில், அதிகவேகம், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காலாவதியான சாலை வரி மற்றும் விவரக்குறிப்புகளின்படி இல்லாத பதிவு எண் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 166 சம்மன்களும், அதிக எடை ஏற்றிச்சென்ற எட்டு லோரிகள் உட்பட பல்வேறு குற்றங்களை உள்ளடக்கிய மொத்தம் 253 சம்மன்களும் வழங்கப்பட்டது.
“இதற்கிடையில், நாட்டில் வசிப்பதற்கு சட்டபூர்வ ஆவணங்களற்ற 11 இந்தோனேசியர்கள், 12 இந்தியர்கள், 2 வங்காளதேசிகள், மியன்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒருவர் உட்பட 27 வெளிநாட்டினரைகுடிநுழைவுத் துறையினர் கைது செய்தார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.