கோவை: கோவையில் நேற்று நடைபெற்ற ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் ( சிஐஐ ) தென்னிந்திய ‘சிஎஸ்ஆர்’ திட்டத்தின் தலைவர் மற்றும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவிசாம், ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தொழிலதிபர்கள் எஸ்.வி.பாலசுப் ரமணியம், சங்கரா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஆர்.வி.ரமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்நிகழ்வு குறித்து ரவிசாம், வனிதா மோகன் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பிரதமரை சந்தித்து பேசிய போது, கோவையில் சர்வதேச விமான போக்கு வரத்து அதிகரித்தல், ஜவுளித்தொழிலில் ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தி டுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினோம்.
அதற்கு பதிலளித்த பிரதமர், “நீர்நிலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். குஜராத்தில் முன்பு தண்ணீர் பிரச்சினை மிக அதிகம் காணப்பட்டது. மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் தற்போது அங்கு பிரச்சினை இல்லை.
அதேபோல் கோவையிலும் நீர்நிலைகளை பாதுகாத்தல், தண்ணீர் மேலாண்மை திட்டங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்” என்றார்.
ஜவுளித்தொழிலை பொறுத்தவரை ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ( எப்டிஏ ) கையெழுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப் படும். முதல் கட்டமாக தேர்தலுக்கு பின் இங்கிலாந்துடன் ‘எப்டிஏ’ கையெழுத்திடப்படும்.
கோவையில் வளர்ச்சிக்கு உதவ எப்போது வேண்டுமானாலும் எனது அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் பிரதமர் உறுதி அளித்தார். பிரதமருடன் பேசியது போன்ற உணர்வு இல்லை. நம் குடும்பத்தில் ஒருவராகவே அவர் பேசினார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.