கோவை: தரமான பம்ப்செட் தயாரிப்பில் உலகளவில் கோவை மாவட்ட பம்ப்செட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய பம்ப்செட் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக், தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சவுந்தர் ராஜன், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் முன்னாள் தலைவர் மற்றும் பம்ப்செட் விற்பனையாளர் நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது: தேசிய அளவிலான பம்ப்செட் தேவையில் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பு கொண்டுள்ளன. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை பம்ப்செட் சீசனாகும்.
இவ்வாண்டு ஜனவரி இரண்டாவது வாரத்திலேயே பம்ப்செட் சீசன் தொடங்கி விட்டது. தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. வெயில் தாக்கம் அதிகம் காணப்படுவதால் விவசாய பயன்பாட்டுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப் படும் பம்ப்செட் தேவையும் உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தை போல் குஜராத்தில் பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டாலும், நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கோவை பம்ப்செட் பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய ( ஏப்ரல் மாத ) நிலவரப்படி விவசாய பம்ப்செட் தேவை 15 சதவீதம் வரையும், வீடுகளுக்கான பம்ப்செட் 10 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பம்ப்செட் தேவை மேலும் உயரும். இவ்வாண்டு சீசன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ( கோப்மா ) தலைவர்மணிராஜ் கூறும் போது, “கோவையில் உள்ள பெரும்பாலான குறுந் தொழில் நிறுவனங்களில் வீடுகளுக்கு தேவையான பம்ப்செட் பொருட்களே அதிகம் தயாரிக்கப் படுகின்றன. தற்போது நிலையான தேவை காணப்படுகிறது. பெரும்பாலான அரசுத்துறைகளில் பெரிய நிறுவனங்களின் பம்ப்செட் பொருட்கள்மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. குறுந் தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.