புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. தனது கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி ஸ்வர்ண காந்த் சர்மா கடந்த வாரம் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிரான கேஜ்ரிவாலின் மனு மீது டெல்லி உயர்நீதி மன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றம் தனது உத்தரவில், “ஹவாலா தரவுகள், கோவா தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரின் ஒப்புதல் வாக்குமூலம் போன்ற பல்வேறு வடிவங்களில் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கை சரியானதே. அவர் சிறையில் அடைக்கப்பட்டது சட்டவிரோதம் என கூற முடியாது என்பதற்கு அமலாக்கத் துறை போதுமான ஆதாரங்களைத் திரட்டியுள்ளது.
காணொலி மூலமாக விசராணை நடத்தி இருக்கலாம் என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் வாதம் நிராகரிக்கப்பட வேண்டியதே. விசாரணை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை குற்றம்சாட்டப்பட்டவர் தீர்மானிக்க முடியாது. விசாரணை என்பது குற்றம்சாட்டப்பட்டவரின் வசதிக்கேற்ற இருக்க முடியாது. இந்த நீதிமன்றத்தால் சாமானியர்களுக்கு ஒரு சட்டம், அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் என இரண்டு சட்டங்களை வகுக்க முடியாது. முதல்வர் உட்பட யாருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்க முடியாது” என்று கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பை வாசிக்கும் முன்னதாக, ‘அமலாக்கத் துறை பகிர்ந்துள்ள ஆவணங்களின்படி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றவர்களுடன் இணைந்து சதியில் ஈடுபட்டுள்ளார், குற்றத்தின் மூலம் கிடைத்த வருவாயை பயன்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது கைவிடப்பட்டுள்ள புதிய மதுபானக் கொள்கையை வகுப்பதிலும், கிக் பேக் கோருவதிலும் அரவிந்த் கேஜ்ரிவால் தனிப்பட்ட முறையில் ஈடுப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக, ஊழலுடன் தொடர்புடைய நடவடிக்கையில் கேஜ்ரிவால் பங்கேற்றது தெரிய வருகிறது’ என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
முன்னதாக, அமலாக்கத் துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்த அரவிந்த் கேஜ்ரிவால், மார்ச் 23-ம் தேதி கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். அப்போது அவர் இந்தக் கைது நடவடிக்கை தனது அடிப்படை உரிமையை மீறுவதாக தெரிவித்திருந்தார். கேஜ்ரிவாலின் மனு மீது முடிவு எடுக்க அமலாக்கத் துறையின் பதில் முக்கியம் எனக் கூறி மார்ச் 27-ம் தேதி அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த பதிலில், ‘விசாரணை நீதிமன்றத்தில், தனது நீதிமன்ற காவலை நீட்டிக்க ஆட்சேபம் இல்லை’ என்ற கேஜ்ரிவாலின் அறிக்கையை மேற்கோள்காட்டி, கேஜ்ரிவாலின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் சதிகாரர் என்றும், அவர் தனது அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருடன் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட்டார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது.