புது தில்லி: தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
தன்னை தொடர்ந்து அமலாக்கத் துறை காவலில் வைக்க கேஜரிவால் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், உரிய காரணங்களின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
தில்லியில் மதுபான (கலால்) கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர், இந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாதம் 21-ஆம் தேதி கைது செய்தது. முதல்வர் கேஜரிவால் தற்போது திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் கேஜரிவால் தாக்கல் செய்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. “மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஜனநாயகம், நியாயமான-சுதந்திரமான தேர்தல், தேர்தலில் சமவாய்ப்பு உள்ளிட்ட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்புக்கு முரணானது’ என கேஜரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமலாக்கத் துறை, “சட்டத்தின் முன் அனைவரும் சமம். தேர்தலை காரணம் காட்டி கைது நடவடிக்கையிலிருந்து கேஜரிவால் தப்பிக்க முடியாது’ எனத் தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர் கேஜரிவாலின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கேஜரிவாலின் ஜாமீன் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தவில்லை. அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. போதிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. இதில் எந்தச் சட்ட விதிமீறலும் இல்லை.
உரிய காரணங்களுக்காகத்தான் அமலாக்கத் துறை காவலுக்கு விசாரணை நீதிமன்றம் அவரை அனுப்பியது. இதைச் சட்டவிரோதம் எனக் கூற முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த விவகாரம் மனுதாரர் கேஜரிவாலுக்கும் அமலாக்கத் துறைக்கும் இடையிலானதே தவிர, அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலானது அல்ல என்பதை விளக்குவது முக்கியமானது. கேஜரிவாலுக்கு எதிராக அரசுத் தரப்பு சாட்சியங்கள் தெரிவித்த வாக்குமூலங்கள் விசாரணையின்போது உறுதிசெய்யப்படும். இதனிடையே, அந்தச் சாட்சியங்களிடம் கேஜரிவால் தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொள்ளலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தை நாட முடிவு
அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தில்லி அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சௌரவ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உயர்நீதிமன்றத்தை மதிக்கிறோம். அதேவேளையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உடன்பாடில்லை. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம். ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட ஒரு ரூபாயைக்கூட சிபிஐயும் அமலாக்கத் துறையும் கைப்பற்றவில்லை.
நாட்டின் தலைநகரான தில்லியிலும் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் இரு மாநில ஆம் ஆத்மி அரசுகளை இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிதான் கலால் கொள்கை ஊழல் என்ற மிகப்பெரிய அரசியல் சதி’ என்றார் அவர்.