சர்வதேச டெஸ்ட் போட்டியில் இன்று அறிமுகமாகியுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் முதல் இன்னிங்ஸில் தற்போது வரை 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து யார் இந்த ஆகாஷ் தீப் என கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கூகுளில் தேடத் தொடங்கியுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது ராஞ்சியில் நடைபெற்று வரும் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆகாஷ் தீபிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் மூலம் அவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார்.
தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அணிக்கு சரிவை ஏற்படுத்தினார். ஸாக் கிராவ்லே, பென் டக்கெட், ஆலி போப் போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள் ஆகாஷ் தீபின் வேகத்தில் வீழ்ந்தனர். இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. 17 ஓவர்கள் வீசிய ஆகாஷ் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
முதல் போட்டியிலேயே அதிரடியாக விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஆகாஷ் தீப் பெற்றுள்ளார். பீகார் மாநிலம் சசராமை சேர்ந்த ஆகாஷ் இளம் வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார். ஆனால் இதற்கு அவரது தந்தை உதவி செய்யவில்லை.
இதனால் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு சென்ற அவருக்கு உறவினர்களில் ஒருவர் உதவியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து விளையாடிய ஆகாஷ் தீபின் தந்தை சில மாதங்களில் உயிரிழந்த விட, அதைத் தொடர்ந்து அவரது சகோதரரும் மரணம் அடைந்துள்ளார்.
வறுமை காரணமாக 3 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திய ஆகாஷ், இடைப்பட்ட காலத்தில் தன் தாயாருக்கு உதவியாக இருந்துள்ளார். பின்னாளில் கொல்கத்தாவுக்கு குடி பெயர்ந்த ஆகாஷ், தனது திறமையால் 23 வயதுக்கு உட்பட்ட பெங்கால் அணியில் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுபற்றி அறிந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் அவரை 2022 ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் 2024 பிப்ரவரி 23 ஆம் தேதியான இன்று இந்திய அணியின் 313 ஆவது வீரராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார் ஆகாஷ் தீப். அவரது பின்னணி பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…