எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் சூழலில், போர் நீடிக்கும் காசாவுக்கு அமெரிக்கா முதல் முறை மனிதாபிமான உதவிகளை வானில் இருந்து வீசியுள்ளது.
எனினும் காசாவில் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேலிய துருப்புகள் இடையே மோதல் நீடிப்பதோடு பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இடைவிடாது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு நகரான ரபாவின் மருத்துவமனை ஒன்றுக்கு அருகில் இடம்பெயர்ந்தவர்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்தனர்.
இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பை இலக்கு வைத்து மருத்துவமனைக்கு அருகில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியபோதும், இந்தத் தாக்குதல் மூர்க்கத்தனமானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரபாவில் உள்ள மூன்று மாடி வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சனிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 14 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
தெற்கு நகரான கான் யூனிஸின் ஹமத் பகுதியை நோக்கி இஸ்ரேலிய துருப்புகள் முன்னோறுவதை ஒட்டி அங்கு உக்கிர வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வடக்கு மற்றும் மத்திய காசாவில் மேலும் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாக வபா கூறியது. ஜபலியா அகதி முகாமில் உள்ள வீடுகள் மற்றும் அல் நுஸைரத் முகாமில் இருக்கும் வீடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்று 72 மணி நேரத்தின் பின் காசா நகரின் நப்லூஸில் அவ்வாறே உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் துருப்புகள் மீண்டும் ஒரு முறை சூடு நடத்திய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதன்போது மேலும் மூவர் காயமடைந்ததாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நீடிக்கும் இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30,500ஐ நெருங்கி இருப்பதோடு மேலும் 71 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
கெய்ரோவில் மீண்டும் பேச்சு
எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதி முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பிக்க உள்ள நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்றைய தினத்திற்குள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தூதுக்குழுக்கள் இன்று கெய்ரோவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எகிப்தின் இரு பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எனினும் தற்போது ஹமாஸின் பிடியில் உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளின் முழு விபரம் கிடைக்கும் வரை இஸ்ரேல் தனது தூதுக் குழுவை கெய்ரோவுக்கு அனுப்பாது என்று மற்றொரு தரப்பு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஹமாஸுடனான போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை இஸ்ரேல் பரந்த அளவில் அங்கீகரித்திருப்பதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் தமது பிடியில் இருக்கும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக் சூடிய பணயக்கைதிகளை விடுப்பதற்கான செய்தியை வெளியிட்டால் ஆறு வாரங்கள் கொண்ட போர் நிறுத்தம் ஒன்று உடன் ஆரம்பிக்கப்படும் என்று அந்த அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
‘இஸ்ரேல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அதனை ஏற்றுக் கொள்கிறது’ என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, தற்போது ஹமாஸின் கைகளிலேயே முடிவு உள்ளது என்று குறிப்பிட்டார்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பலஸ்தீன போராளிகள் சுமார் 250 பேரை பணயக்கைதிகளால் பிடித்தனர். இதில் தொடர்ந்து 130 பேர் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
இந்நிலையில் பணயக்கைதிகள் தொடர்பில் ஹமாஸின் பதிலை எதிர்பார்த்து இஸ்ரேல் காத்திருப்பதாக இஸ்ரேலிய மூத்த இராஜதந்திர அதிகாரி ஒருவர் இஸ்ரேலின் ஹாரட்ஸ் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார். பணயக்கைதிகள் யார் யாரை விடுவிப்பது என்பதே முக்கிய விடயமாக உள்ளது. இவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் அல்லது இல்லை என்பது அடங்கும். அதேபோன்று கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையில் எத்தனை பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படும் என்ற விடயமும் இதில் முக்கியமாக உள்ளது என்றும் அந்த இராஜதந்திரியை மேற்கோள்காட்டி ஹாரட்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றால் அடுத்த 24 தொடக்கம் 48 மணி நேரத்தில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படலாம் என்று மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவது மற்றும் மனிதாபிமான உதவிகள் அதிகரிப்பது உட்பட ஹமாஸின் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் இணங்கினால் அடுத்த 24 தொடக்கம் 48 மணி நேரத்திற்குள் உடன்பாடு ஒன்றுக்கு வழி ஏற்படும்’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிமானதன்றி முழுமையான போர் நிறுத்தம் ஒன்றுக்கும் எமது மக்கள் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவுமே ஹமாஸ் வலியுறுத்துகிறது என்று லெபனானை தளமாகக் கொண்ட ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்தான் அல் அரபியா தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேலுக்குள் கடும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. இது தொடர்பில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பாரிய பேரணிகள் கடந்த சனிக்கிழமையும் டெல் அவிவ் மற்றும் ஜெரூசலத்தில் இடம்பெற்றன.
அமெரிக்காவின் உதவி
முற்றுகையில் உள்ள குறுகிய நிலப்பகுதியான காசாவில் மனிமாபிமான நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில் காசாவில் பஞ்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அண்மைய நாட்களில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 16 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க இராணுவ விமானங்கள் பாராசூட் மூலம் 38,000க்கும் அதிகமான உணவுப் பொதிகளை காசாவுக்கு வானில் இருந்து போட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளை அடுத்தே காசாவுக்கு அமெரிக்காவும் வானில் இருந்து உதவிகளை போட்டுள்ளது. எவ்வாறாயினும் இவ்வாறான நடவடிக்கைகள் தரையில் இருந்து உதவிகளை விநியோகிப்பதை ஈடு செய்யாது என்று அதிகாரிகள் மற்றும் உதவிக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காசாவில் கடுமையான உணவு பாதுகாப்பின்மை ஏற்பட்டிருப்பது குறித்து கவலையை வெளியிட்டிருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபை, உதவி விநியோகங்களை எடுத்துச் சென்ற வாகனங்களை நோக்கி ஒன்று திரண்ட மக்கள் மரணத்தை எதிர்கொண்டதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்புச் சபை கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பொது மக்களை பாதுகாப்பதற்கு அனைத்து தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என்றும் மனிதாபிமான உதவிகளை உடனடி, விரைவான, பாதுகாப்பான, நீடித்த மற்றும் தடையின்றி வழங்குவதை அனுமதிக்கவும், எளிதாக்கவும் மற்றும் செயல்படுத்தவும் மோதலில் உள்ள தரப்பினரை வலியுறுத்தியது.
உதவிக்காக கூடியவர்கள் கொல்லப்பட்ட இந்த சம்பவர் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்த பல உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் 117 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது பொதுமக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் சூடு நடத்தியதாக அந்த அமைச்சு குறிப்பிடும் அதேநேரம், இதில் பெரும்பாலானவர்கள் நெரிசலில் சிக்கியே உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.
எனினும் காசா நகர மருத்துவமனைக்கு சென்ற ஐக்கிய நாடுகள் குழுவொன்று, துப்பாக்கி காயங்களுடன் பெரும் எண்ணிக்கையானவர்களை கண்டதாக தெரிவித்துள்ளது.