ஓரே சிக்சர் மூலம் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த சஜனா. எப்படி ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு, ஐபிஎல் போட்டியில் விளையாடுவது கனவோ, அப்படிதான் வீராங்கனைகளுக்கு Women Premier League. கடந்த ஆண்டு முதல் தொடங்கிய WPL கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொண்டது.
இதில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் முதன்முறையாக களம் கண்டார் கேரளாவின் சஜனா. அவருக்கு வாய்ப்பு கிடைத்ததோ கடைசி பந்து. அதுவும் வெற்றி பெற 5 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை. கூலாக உள்ளே சென்ற சஜனா, சார்ஜாவில் மியாண்டட் அடித்தது போன்று சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற செய்ய, பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
சஜனா ஒன்றும் எளிதில் இந்த உயரத்தை தொட்டுவிடவில்லை. கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள மனன்ந்தவாடி என்ற பகுதியைச் சேர்ந்த சஜனாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர். தாய் அப்பகுதியின் கவுன்சிலர். 23 வயதுக்குட்பட்டோருக்கான கேரளா அணியை வழிநடத்திய சஜனா கடந்த WPL ஏலத்தில், ஏலம் போகவில்லை. எனினும் மனம் தளராது தனது திறமையை வளர்த்து கொண்ட சஜனாவை இந்த ஆண்டு 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ். தன் மீது வைத்த நம்பிக்கையை முதல் போட்டியிலேயே நிரூபித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படம், கிராமத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி சிகரத்தை தொட்டார் என விளக்கி இருக்கும். அதே போன்று சஜனாவும் தன்னை கிரிக்கெட் உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார். இதில் கொசுறு செய்தி என்னவென்றால், சஜனாவும் கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை உற்சாகப்படுத்தும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதுதான்.
தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எவரெஸ்ட் சிகரம் கூட, சிறிய மலைமுகடே என சாதித்துள்ளார் இந்த சஜனா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…