ஐதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி, தெற்கு கேரள மாவட்டத்தில் உள்ள குருப்பந்தரா அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய கால்வாய்க்குள் காரை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஒரு பெண் உட்பட நான்கு பேர் கொண்ட குழு ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் பயணித்த சாலை, கனமழை காரணமாக கால்வாய் சூழ்ந்த பகுதி தண்ணீரால் மூடப்பட்டிருந்தது, இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தப் பகுதி அறிமுகமில்லாததால், அவர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி செல்லும்போது, கால்வாயை தண்ணீர் தேங்கிய சாலை என்று தவறாக எண்ணி ஓட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கேரளாவுக்கு 4 பேர் காரில் சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் மூணாறில் இருந்து ஆலப்புழாவுக்கு காரில் பயணித்துள்ளனர். வழி தெரியாத நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டி வந்திருக்கின்றனர். கோட்டயம் அருகே குருப்பந்தரா என்ற இடத்தில் கார் வந்த நிலையில் அங்கிருந்த சாலை இரண்டாக பிரிந்தது.
அப்போது கூகுள் மேப் காட்டிய வழியில் அவர்கள் காரை செலுத்தியுள்ளனர். அந்த சாலை மழை காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்ததை தெரியாமல் அவர்கள் சென்றுள்ளனர். சாலையை மூழ்கடித்தபடி கால்வாயில் இருந்து மழை நீர் சென்றுள்ளது. இதனால் காரை திணறியபடி ஓட்டிச்செல்ல அது கால்வாய் இருக்கும் பகுதிக்குள் சென்றுள்ளது. 200 மீட்டர் சாலையில் இருந்து தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் உள்ளே இருந்தவர்கள் அலறினர்.
ஆனால் கார் எதிர்பாராத நிலையில் தரை தட்டிய நிலையில் சுதாரித்துக் கொண்டு 4 பேரும் காரில் இருந்து வெளியேறினர். அதிகாலை இந்த சம்பவம் நடந்த நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காரை மீட்க முயன்றனர். பின்னர் தீயணைப்பு படையினர் காலையில் வந்து போராடி மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து கார் ஓட்டுநர் கூறியதாவது, ”கால்வாயை தண்ணீர் தேங்கிய சாலை என்று தவறாக எண்ணிவிட்டேன். நான் 10 கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன். வாகனத்தின் பின்புறம் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியபோதுதான் நாங்கள் விபத்தை உணர்ந்தோம். காரில் இருந்து ஜன்னல் வழியாக தப்பித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
Also read |
சப்பாத்தி மார்க்கெட் கேள்விப்பட்டு இருக்கீங்களா.. ஒன்னு என்ன விலை தெரியுமா?
கேரளாவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கூகுள் மேப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஓட்டப்பட்ட கார் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மழைக்காலத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான எச்சரிக்கை வழிகாட்டுதல்களை கேரள காவல் துறை வெளியிட்டுள்ளது.
.