சென்னை: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) சர்வரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், வங்கிப் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு, தமிழகம் முழுவதும் 1,700-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
இந்நிலையில், இந்த வங்கியின் சர்வரில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், “பாரத ஸ்டேட் வங்கியில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது, செயலிகள் மூலம் கடைகளில் பணம் செலுத்துவது, சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் இருப்பு விவரம் அறிந்துகொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், திடீரென இன்று (நேற்று) பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் சேவைகளில் தடை ஏற்பட்டது. இதனால், பணப் பரிவர்த்தனை, ஏடிஎம்களில் பணம் எடுத்தல், செயலி மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து, வங்கித் தரப்பில் கேட்டபோது முறையான பதில் இல்லை” என்றனர்.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வங்கி சர்வரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் சரிசெய்யப்பட்டது. இதன் காரணமாக, வங்கி சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது” என்றனர்.