எல்.பி.எல் தொடரில் சாம்பியனாகும் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி புதன்கிழமை ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தகுதிபெற்றது. தம்புள்ள வைகிங் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் ஜப்னா அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கான தகுதியை தனதாக்கிக்கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது. அவிஸ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும், ஜொன்சன் சாள்ஸ் 76 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் சரித் அசலங்க, அணித்தலைவர் திசர பெரேரா, சொஹைப் மாலிக், வனிந்து ஹசரங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களைப் பெற்றது.
மலிந்த புஸ்பகுமார 2 விக்கெட்டுகளையும், லஹிரு குமார, அன்வர் அலி, ரமேஸ் மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய தம்புள்ள வைகிங் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.முன்வரிசை வீரர்களான சமித் பட்டேல், நிரோஸன் திக்வெல்ல, உபுல் தரங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பின்வரிசையில் ரமேஸ் மென்டிஸ் 26 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக இருக்கவில்லை.
தம்புள்ள வைகிங் அணி 19.1 ஓவரில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அதன்படி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஜப்னா அணி பெற்றது.
எல்.பி.எல் தொடரில் சாம்பியனாகும் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி புதன்கிழமை ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸும்,காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதவுள்ளன.