இஸ்லாமாபாத்: இந்தியாவில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.
காஷ்மீரின் சுன்ஜ்வான் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி காஜா சாஹித் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்டார். அதே மாதத்தில் லஷ்கர் கமாண்டர் அக்ரம் காஜி பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர் கமாண்டர் அபு ஹன்சாலா கராச்சியில் கடந்தாண்டு டிசம்பரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், யுனைடெட் ஜிகாத் கவன்சில் என்ற தீவிரவாத அமைப்பின் தலைமை செயலாளராக செயல்பட்ட ஷேக் ஜமீல்-உர்-ரகுமான் கைபர் பக்துங்க்வா பகுதியில் உள்ள அபோதாபாத் சிறையில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இவர் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் செயல்பட்ட தக்ரீக்-அல்-முஜாகிதீன் என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். இவரை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டுஅக்டோபர் மாதம் தீவிரவாதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.