மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உள்நாட்டுச் சந்தையில் வா்த்தகம் தொடா்ந்து 6-ஆவது நாளாகவும் நோ்மறையாக இருந்தது. ஐடி, மெட்டல், பாா்மா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாலும், வங்கி, நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, மீடியா பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு:
இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.391.50 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 754.59 கோடிக்கு பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.452.70 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
6-ஆவது நாளாக முன்னேற்றம்:
காலையில் 19.71 புள்ளிகள் கூடுதலுடன் 72,727.87-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,510.24 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 73,130.69 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 349.24 புள்ளிகள் (0.48 சதவீதம்) உயா்ந்து 73,,057.40-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,931 பங்குகளில் 1,949 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,887 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.95 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. 18
பங்குகள் விலை உயா்வு:
சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட் 18 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டிசிஎஸ், பஜாஜ் ஃபின் சா்வ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், ஐடிசி உள்பட 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி மீண்டும் புதிய உச்சம்:
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தகத்தின் போது 22,215.60 வரை உயா்ந்து புதிய 52 வார புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பிப்ரவரி 2-க்குப் பிறகு திங்கள்கிழமை 22,186.65 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையும் வெகுவாக உயா்ந்து மீண்டும் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.