முல்லைப் பெரியாரில் புதிய அணைக்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்ய, வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த விண்ணப்பம் இன்று பரிசீலனைக்கு வர உள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையை தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை பராமரித்து வருகிறது. 128 ஆண்டுகளை கடந்துவிட்ட இந்த அணை வலிமையை இழந்துவிட்டதாக கூறி வரும் கேரள அரசு, அணை உடைந்தால் பேரழிவு ஏற்படும் என கூறி வருகிறது.
இதனால், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குறித்த வழக்குகளில், உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு, அணையின் வலிமையையும் உறுதி செய்தது.
ஆனால், 2018 ஆம் ஆண்டு மீண்டும் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக, கேரள அரசு தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்ற மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, புதிய அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தது.
இதையும் படிக்க: திடீரென சரிந்து விழுந்த மேடை… அதிர்ந்த ராகுல்காந்தி… பீகாரில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு!
இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கான கால அளவு மே மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இதனால், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க கோரி கேரள அரசு மீண்டும் விண்ணப்பித்துள்ளது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதிய போதிலும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பரிசீலனை செய்ய கேரள அரசின் விண்ணப்பம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், 2018 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட சூழல், தற்போதும் மாறாமல் உள்ளதென்று கேரள அரசு வாதிட உள்ளதாக அம்மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அணையின் கீழ் உயிர் பயத்துடன் வாழும் மக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க கோரிக்கை வைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த முறை, முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டுமானத்திற்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதலை கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு விதித்திருந்தது. இது போல், உச்சநீதிமன்ற உத்தரவுக்குட்பட்டு மொத்தம் 7 நிபந்தனைகளை விதித்து இருந்தது. இம்முறையும் இதுபோன்ற நிபந்தனைகளுடன் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தை பொறுத்தவரை கேரளா அரசின் மனுவை பரிசீலனை செய்து, ஆய்வுக்கான நெறிமுறைகளை மட்டுமே வழங்கும். அணை கட்ட எந்த அனுமதியும் வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் புதிய திட்ட அறிக்கையின்படி, புதிய அணையை வண்டிப்பெரியாரிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது உள்ள அணையிலிருந்து 1200 அடி கீழ் திசையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
.