ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், `ரஷ்யா, அணுசக்தி யுத்தத்திற்குத் தொழில்நுட்ப ரீதியாகத் தயாராக இருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார். பிப்ரவரி 2022 முதல் உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. பல்வேறு உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர முயன்றும், போர் நின்றபாடில்லை. இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி போரை ஊக்குவிப்பதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் தனியார் செய்தி நிறுவனத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் அளித்த பேட்டியில், “அமெரிக்கா, தன்னுடைய ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பினால், அது போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாகக் கருதப்படும். எனக்கு இன்னும் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான அதிகாரம் கிடைக்கும் என்பது உறுதி. அதனால் தற்போது அவசரமாக அணு ஆயுத யுத்தம் நிகழ்த்துவதற்கான சூழல் இல்லை. உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். எங்களுக்கு எங்கள் சொந்த கொள்கைகள் உள்ளன. அதே நேரம் ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக அணு ஆயுதப் போருக்கும் தயாராக இருக்கிறோம். ரஷ்ய எல்லையில் – அல்லது உக்ரைனுக்கு – அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பினால், ரஷ்யா இதைப் போரில் அமெரிக்காவின் தலையீடு என்றே கருதும்” என எச்சரித்திருக்கிறார்.