உலகின் மிகப்பெரிய, பிரபலமான மல்யுத்த நிறுவனம் WWE. 90’s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவராலும் இன்றளவும் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், கடந்த வாரம் நெட்ஃபிக்ஸுடன் WWE-ன் Raw நிகழ்ச்சியை ஜனவரி 2025 முதல் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யவும், 31 ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக , வின்ஸ் மக்மஹோன் (78) இருந்து வருகிறார். 2022-ம் ஆண்டில், வின்ஸ் மக்மஹோன் மீது பாலியல் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவர் WWE-ன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார். வின்ஸ் மக்மஹோனுக்கு பதிலாக அவரது மகள் தற்காலிக தலைமை நிர்வாகி மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஜனவரி 2023-ல், குற்றச்சாட்டுகள் குறித்து நிறுவனம் விசாரணையை முடித்த பின்னர், அவர் WWE-ன் தலைமை நிர்வாகியாக மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநிலத்தில் WWE-ன் முன்னாள் ஊழியர் ஜேனல் கிராண்ட் என்பவர், கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார்.

அதில், “மக்மஹோன் WWE-ன் தலைமை நிர்வாகி பதவியிலிருந்தபோது, அவர் என்னை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, மனநல சித்ரவதை செய்து, உடல்ரீதியான வன்முறையில் ஈடுபட்டார். வேலை வேண்டுமானால், அவரோடு படுக்கையைப் பகிர்ந்திருக்க வேண்டும் எனக் கேட்டார். என் குடும்பச் சூழலை அவருக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார். அந்த நேரத்தில் பாலியல் உறவு கொள்ள ஜான் லாரினிடிஸ் உட்பட சில நபர்களை மக்மஹோன் பயன்படுத்திக் கொண்டார்.
வேலை நேரத்தில்கூட, WWE தலைமையகத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபடுவர்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்துப் பேசிய வின்ஸ் மக்மஹோன், “கிராண்ட்டின் வழக்கு அபத்தமான கற்பனைகள். ஒருபோதும் நடக்காத பொய் சம்பவங்கள். இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நான் என்னைப் பாதுகாக்க முயல்வேன். நான் குற்றமற்றவன் என்ற முறையில் என் பெயரைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டர். மக்மஹோன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த WWE ஒரு சட்டக் குழுவை நியமித்துள்ளது. விசாரணை முடிந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வின்ஸ மக்மஹோன் WWWE மற்றும் அதன் தாய் நிறுவனமான TKO ஆகியவற்றில், தான் வகித்துவந்த பதவிகளிலிருந்து தாமாக முன்வந்து விலகியிருக்கிறார்.