Last Updated:
அடுத்து பேட்டிங் செய்யும் தென் ஆப்பிரிக்கா அணி குறைந்தது 350 முதல் 400 ரன்கள் வரை எடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுக்கலாம்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன. இந்த நிலையில் இறுதிப் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது இந்த முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது.
தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினர். அந்த அணியின் அனுபவ வீரர் ஸ்டீபன் ஸ்மித் 66 ரன்களும், பியூ வெப்ஸ்டர் 72 ரன்களும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 23 ரன்கள் சேர்த்தார்.
மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 56.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 15.4 ஓவர்கள் வீசி 51 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மார்க்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
லார்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு வேகப்பந்துவீச்சு அருமையாகக் கை கொடுத்தது. 57 ஓவர்களுக்குள்ளாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டுள்ளது. அடுத்து பேட்டிங் செய்யும் தென் ஆப்பிரிக்கா அணி குறைந்தது 350 முதல் 400 ரன்கள் வரை எடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுக்கலாம்.
அதே நேரம் பாட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியில் இருப்பதால் அவர்கள் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
June 11, 2025 8:55 PM IST


