Last Updated:
WPL 2026 | மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நான்காவது முறையும் தோல்வியைத் தழுவியது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
நான்காவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்யது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, தொடக்கத்தில் ஆர்சிபி வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், லாரா உல்வார்ட், ஹென்றி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து, இமாலய இலக்கை சேஸிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்களில் நடையைக்கட்டினாலும், நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொருபுரம் ஜார்ஜியா வோல் தம் பங்கிற்கு 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராதா யாதவ் இரண்டு பவுண்டர்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனால் ஆர்சிபி அணி 19 புள்ளி 4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதேநேரம் நான்காவது முறையாக இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கோப்பையைத் தவறவிட்டது டெல்லி ரசிகர்களுக்குப் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆர்சிபி மகளிர் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் ஆடவர் பிரிவிலும் ஆர்சிபி அணி சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


