இரண்டு உலகக் போர்களால் பெரும் பேரழிவை சந்தித்த பூமி பந்து, மூன்றாவது உலகக் போரை சந்தித்ததால் அதன் பேரழிவை யூகிக்க கூட முடியாது என்று காலம் காலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களாலும், அணு ஆயுதங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த பகுதியே ஹிரோஷிமா, நாகசாகிகளைப் போல் இருந்த இடமே தெரியாமல் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. அப்படியொரு போருக்கு வித்திடும் வகையில் தான் ஈரான் மீது, அமெரிக்கா துல்லிய தாக்குதல் நடத்தியதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இது அமைதிக்கான நேரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார் நடந்தது என்ன?
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இத்தகையை சூழலுக்கு 20 மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலே காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் தொடுத்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வகையில் தாங்கள் ஓயப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதர்யாகு சூளுரைத்திருந்தார். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பை டார்கெட் செய்து, காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தியது. பின்னர், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதித்தது. மேலும், கடந்த 2024 அக்டோபர் மாதம் இஸ்ரேல் குடியிருப்புகள் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணையை ஏவி ஈரான் தாக்குதல் தொடுத்தது.
இந்த சூழலில் கடந்த 13 ஆம் தேதி “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஈரானில் உள்ள அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தியதாக விளக்கம் அளித்தது. இதற்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல் மீது இடைவிடாது ஏவுகணைகளை ஏவியது. இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தாக்குதலை கைவிடும் படி அமெரிக்கா எச்சரித்து வந்தது.
இந்த நிலையில் தான், ஈரானின் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. அதிநவீன பி-2 ரக போர் விமானங்கள் மூலம் அணு சக்தி நிலையங்கள் மீது குண்டு மழை பொழிந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஃபோர்டோ அணு சக்தி நிலையத்தின் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், அதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
யுரேனியத்தை செறிவூட்டுவதில் இந்த நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஃபோர்டோ பகுதியில் சாதாரண ஏவுகணைகள் ஊடுருவ முடியாத வகையில் மலையை குடைந்து அணு சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ‘பங்கர் பஸ்டர்’ எனப்படும் அதிநவீன ஏவுகணை மூலம் அந்த நிலையம் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா மார்தட்டியுள்ளது. ஈரானின் அணு சக்தி நிலையங்களை அமெரிக்க விமானங்கள் தாக்கியதை, வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் டிரம்ப் கண்காணித்தார். அப்போது, துணை அதிபர் ஜெ.டி.வேன்ஸ் உட்பட 9 பேர் உடனிருந்தனர்.
உலக நாடுகளையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஈரானின் உச்சபட்சத தலைவர் கமேனியின் பிரதிநிதி ஹூசைன் ஷரியத்மதாரி, முதற்கட்டமாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளார். அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு ஆதரவான ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போரில் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டோம் என்று ஏமன் ராணுவமும் அறிவித்துள்ளது. எனவே, தங்களது கடல் எல்லைப் பகுதியில் இருந்து கப்பல்களை வெளியேற்றுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் அமெரிக்க தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்பு தெரிவித்துள்ளார். இன்று அமெரிக்கா செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது எனவும், அந்நாட்டின் திறன்மிகு தாக்குதல் மற்றும் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றப்போவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
அணு சக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியிருந்த நிலையில், இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. டெல்அவிவ், ஜெருசலேம் நகரங்களைக் குறிவைத்து 30 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. அதேவேளையில், ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்க இஸ்ரேல் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் விளைவுகள் அதி பயங்கரமாக இருக்கும் என்று ஈரானுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானை அமெரிக்கப் படைகள் தாக்கியுள்ளது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். எனவே, ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின் படி உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், எதற்கும் ராணுவ தாக்குதல் தீர்வாகாது எனவும், அமைதி ஒன்றே நம்பிக்கை தரும் என்றும் குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஈரான் மீது முதல் முறையாக அமெரிக்கா நேரடி தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், உலக அளவில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இதற்கு உரிய தீர்வு எட்டப்பட்டு அமைதி திரும்புமா என்று உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
June 22, 2025 2:10 PM IST

