Last Updated:
ஸ்காட்லாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு முன்னால் இத்தாலி பேட்ஸ்மேன்களால் நீண்ட நேரம் நிலைத்து ஆட முடியவில்லை
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை வீழ்த்தியிருந்தது.
இந்த நிலையில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஜோன்ஸ் 37 ரன்களில் ஆட்டமிழக்க ஜார்ஜ் முன்சி 84 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பிராண்டன் மெக்கல்லம் 41 ரன்களும், மைக்கேல் லீஸ் 22 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இத்தாலி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
இருப்பினும் ஸ்காட்லாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு முன்னால் இத்தாலி பேட்ஸ்மேன்களால் நீண்ட நேரம் நிலைத்து ஆட முடியவில்லை. அந்த அணியின் பென் மனேடி 52 ரன்களும், ஹேரி மனேடி 37 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இத்தாலி அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


