Last Updated:
நடுவரிசையில் களம் புகுந்த கேப்டன் சிக்கந்தர் ராசா, 26 பந்துகளில் 45 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸர்) குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 38-வது லீக் போட்டியில், பலம் வாய்ந்த இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஜிம்பாப்வே காட்டிய அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர் பதும் நிசாங்கா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக பவன் ரத்நாயக்க 25 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. ஜிம்பாப்வே தரப்பில் கிரேம் க்ரீமர் மற்றும் பிளெஸ்ஸிங் முசரபானி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
179 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணிக்குத் தொடக்கம் முதலே அதிர்ஷ்டம் கைகொடுத்தது. தொடக்க வீரர் பிரையன் பென்னட் நங்கூரமாக நின்று ஆடி 63 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நடுவரிசையில் களம் புகுந்த கேப்டன் சிக்கந்தர் ராசா, 26 பந்துகளில் 45 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸர்) குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி இந்த தொடரில் தோல்வியே அடையாமல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.


