Last Updated:
இருப்பினும், இது குறித்து வங்கதேசம் தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் விளையாடுவதற்கு வங்கதேச அணி மறுப்பு தெரிவித்திருந்தது. போட்டியை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என அந்த அணி நிர்வாகம் ஐசிசி-க்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதனை ஐசிசி நிராகரித்துள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து, அந்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமான், பிசிசிஐயின் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் நிலையில் முஸ்தாபிசுர் நீக்கம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் சூழல் காரணமாக பாதுகாப்பு அச்சத்தை வங்கதேசம் முன்வைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து வங்கதேசம் மோதும் போட்டிகளை இந்தியாவில் நடத்தாமல் இலங்கையில் நடத்த வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் அணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், போட்டிகள் முடிவு செய்யப்பட்ட நிலையில், அவற்றை மற்றொரு இடத்துக்கு மாற்றுவது என்பது அதிக சிக்கல்களை ஏற்படுத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நம்புகிறது. இதன் காரணமாக, கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறவிருந்த வங்கதேச அணி பங்கேற்கும் போட்டிகளை சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்தலாமா என்பது குறித்து ஐசிசி ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பான விவரங்களை வங்கதேச அணிக்கு ஐசிசி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து வங்கதேசம் தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. கொல்கத்தா மற்றும் மும்பையில் வங்கதேச போட்டிகள் நடத்தப்படுவதைக் காட்டிலும் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் போட்டி நடத்தப்படும் போது அதிக பாதுகாப்பு இருக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கருதுகிறது.


