Last Updated:
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இத்தாலி அணிக்கு மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவாலாக அமைந்தனர்.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 37-வது லீக் போட்டியில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இத்தாலியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் தூணாக நின்று விளையாடினார். ஒருபுறம் பிராண்டன் கிங் ரன்களிலும், ஹெட்மயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், ஹோப் பொறுப்புடன் ஆடி 46 பந்துகளில் 75 ரன்களை (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) குவித்தார்.
அவருக்கு ஒத்துழைப்பு அளித்த ரோஸ்டன் சேஸ் 24 ரன்களும், இறுதியில் அதிரடி காட்டிய மேத்யூ ஃபோர்டு 8 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இத்தாலி தரப்பில் பென் மானென்டி மற்றும் கலுமகமகே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இத்தாலி அணிக்கு மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவாலாக அமைந்தனர்.
இத்தாலி அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் மோஸ்கா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாலும், அந்தோணி மோஸ்கா 19 ரன்கள் மற்றும் ஜே.ஜே. ஸ்மட்ஸ் 24 ரன்கள் ஓரளவிற்குப் போராடினர். அதன்பின் வந்த பென் மானென்டி 26 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்தார்.
இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஷமார் ஜோசப் தனது அசுர வேகத்தில் இத்தாலியின் பின்வரிசை வீரர்களை நிலைகுலையச் செய்தார். அவர் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.


