Last Updated:
டி பிரிவில் இடம் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி தான் விளையாடிய 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 34-வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, தென்னாப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க வீரர் முகமது வசீம் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அலிஷன் ஷராஃபு மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 45 ரன்கள் சேர்த்தார்.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளையும், அன்றிச் நோர்க்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
123 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ஐடன் மார்க்ரம் வெறும் 11 பந்துகளில் 28 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை அளித்தார். அவரைத் தொடர்ந்து ரியான் ரிக்கெல்டன் 30 ரன்களும், இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 36 ரன்களும் எடுத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
இதனால் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது. இறுதியில் 13.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி தனது ரன் ரேட்டை கணிசமாக உயர்த்தியுள்ளது.


