Last Updated:
இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதாக வென்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி 175ரன்கள் குவித்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்த பாகிஸ்தான் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 25 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் சேர்த்து வெளியேறினார்.
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 40 பந்துகளில் 3 சிக்சர் 10 பவுண்டரியுடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சிவம் துபே 27 ரன்களும், ரின்கு சிங் 11 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சகிப்சதா பர்கான் ரன் ஏதும் எடுக்காமலும், சைம் அயுப் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
கேப்டன் சல்மான் அகா 4 ரன்களிலும், பாபர் ஆசம் 5 ரன்கள் எடுத்தும் வெளியேறினர். 4.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து இணைந்த உஸ்மான் கான் – சதாப் கான் ஓரளவு விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
சதாப் கான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அதைத் தொடர்ந்து உஸ்மான் கான் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் ஷாகின் அப்ரிடி 23 ரன்கள் எடுத்தார். 18 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த பாகிஸ்தான் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Feb 15, 2026 11:45 PM IST


