Last Updated:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
20 அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த போட்டித் தொடர் சென்னை சேப்பாக்கம் உட்பட இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மொத்தம் 8 மைதானங்களில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் இடம்பெறும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, நமிபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், குரூப் சி பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளும், குரூப் டி பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் 2 குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கும், அதிலிருந்து 2 அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுகின்றன.
இந்த நிலையில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் மைதானங்கள் குறித்த அறிவிப்பை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்கத்தா இடன் கார்டன், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், மும்பை வான்கடே ஸ்டேடியம் ஆகிய இந்திய மைதானங்களில் நடைபெறுகிறது.
இதேபோன்று இலங்கையில் கண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், கொழும்பில் உள்ள பிரேமதாசா மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்திலும் என மொத்தம் 8 மைதானத்தில் டி20 உலக கோப்பை நடைபெறும் என ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
November 25, 2025 7:39 PM IST


