லீக் ஆட்டங்களில் சற்றுத் தடுமாறிய இங்கிலாந்து அணி, சூப்பர் 8 சுற்றில் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தாலும், அதன்பின் டாப் கியரில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இதுவரை இருமுறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள அணிகள் எனப் பெருமை பெற்றுள்ள இரு ஹெவி வெயிட்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதில் வென்று இறுதியில் கோப்பையை தட்டித் தூக்கும் அணி டி20 கோப்பையை மூன்றாவது முறையாக வெல்லும் முதல் அணி எனும் பெருமையைப் பெறும். 2022ல் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்தை 2024-ல் அரையிறுதியில் தோற்கடித்து இந்தியா பழிதீர்த்தது. இத்தகைய பின்னணியுடன் இரு அணிகளும் இன்று இரவு 7 மணி அளவில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக சோபிக்காத நிலையில், சரியான சமயத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு சஞ்சு சாம்சன் வந்திருப்பது கூடுதல் பலம்,
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று இங்கிலாந்து அணியில், பிலிப் சால்ட், ஜாஸ் பட்லர், ஹேரி ப்ரக், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாவ்சன், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் களமிறங்கலாம்.

